Monday, May 4, 2009

கதவுகளை மூடிக்கொண்டு...

"யக்கா யக்கா ... " கூவிக்கொண்டு வந்தாள் சசிகலா.

" ஏண்டி, கத்திக்கிட்டே வர்றே? " உரிமையோடு அதட்டினாள் செல்வி . சசிகலா வயதில் சிறியவளாயினும் நெருங்கிய தோழியாயிற்றே!. அதனால் தனக்கு இல்லாத உரிமையா என அதட்டுவதும் அவ்வப்போது அட்வைஸ் செய்வதையும் வழக்கமாக கொண்டாள் செல்வி.

"பூச தொடங்கக்கு சமையம் ஆச்சு!. இன்னும் ரெடி ஆவேலியா?... சாமியாரும் வந்தாச்சு! மொத மணியும் அடிச்சாச்சு!!... நீங்க இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் பிந்தி எழும்பிட்டு, கடைசி நேரத்தில பாஸ்டா ஒடுவிய! கொஞ்சம் செணம்னு போவாண்டாமா!". சலித்துக்கொண்டாள் சசிகலா . அவள் சலித்துக்கொள்வதிலும் காரணம் இருக்கிறது. ஞாயிற்றுகிழமைகளில் முழுப்பூசைக் காண்பது என்பது கிறிஸ்தவ மதக் கொள்கையாகவே இருக்கிறது. ஆனால் செல்வி எந்தவொரு வாரமும் சரியான நேரத்திற்கு தயார் ஆவதில்லை. தாமதம் கொள்வதில் தயக்கமே கொள்வதில்லை!. கலாவும் அவள் பங்கிற்கு சலித்துக்கொள்வதில் சலிப்பே கொள்வதில்லை!!.

"இருடி உனக்கென்ன பிள்ளையா குட்டியா, நான் யாரெல்லாம் கவனிக்கிறது... பிள்ளையள காலத்தையே ஞானதேசத்துக்கு அனுப்பணும்... மாடு வேற காலேலேர்ந்தே கூப்பாடு போட்டுக்கிட்டு கிடந்துது... அதுக்கு தண்ணி வச்சு... ஆட்ட பிடிச்சி கெட்டி... கோழி வேற ரெண்டணம் அடக்கிடக்குது... கருமத்த அதுவள வேற கூட்டுல அடச்சணும்... ஏழெட்டு கோழி முட்ட போடவேண்டி இருக்கு இன்னைக்கு... விட்டா தெக்குவீட்டுக்காரிக்க வீட்டுல கொண்டு போட்டுருது... அதுவளையும் பிடிச்சி கமத்தணும்... எனக்கென்ன பத்து கையா இருக்கு?... நான்தானே எல்லாத்தையும் செய்து தொலச்சணும்... உனக்கென்ன, புதுசா கல்யாணம் ஆயிருக்கு... மாப்பிள்ள கோயிலுக்கு வர்றதும் கெடையாது... வீட்டுல அவரே சாப்பாட பாத்திடுவாரு... எனக்கு என் வீட்டுக்காரரு வேற இன்னைக்கும் ஏதோ சென்டரிங் வேலன்னு கெளம்பிட்டாரு... அவருக்கு சாப்பாடு வேற கெட்டி குடுத்து விடண்டியிருந்தது மனுஷன் வெளியில தின்னயது கெடயாது இதில கெழவி வேற லொக்கு லொக்குன்னு இருமிட்டு..."

"சரி சரி போரம் பேசினது சமையம் ஆச்சு, செணம் சட்டுன்னு கெளம்புங்க"
"இரு… இரு… இந்த தென்னு நல்லா காச்சின்னா ஒரு தேங்கா காணிக்க குடுக்கிறதா வேண்டியிருந்தேன். அத எடுத்துக்கிட்டு வந்திடுறேன் அப்படியே ரெண்டு முட்டையும் எடுத்துக்கிட்டு போயிடலாம்."

"பிள்ளே கோயிலுக்கு வர்ரெலியா" சாலையோரமாய் ஓர் குரல்.

"வர்றேன் மைனி நீஙக கெளம்புங்க!. "

இப்போது இருவரும் கிளம்பியாகிவிட்டது அந்நேரத்தில் சசிகலா குறுக்கிட்டு, "யக்கா ஒரு ஆளு தருமத்துக்கு வாரான்... சீக்கிரமா இந்த இடத்த விட்டு போயிரலாம் வா..."

"அம்மா... அம்மா... "

"காலு கை நல்லாத்தானே இருக்கு!. ஏதாவது வேல செஞ்சி பொழைக்க வேண்டியதுதானே!!... வந்திருவான் காலையிலேயே போ போ ஒண்ணும் இல்ல!"

"அம்மா எதாவது பழைய கஞ்சியாவது இருக்குமா?... "

"ஒண்ணும் இல்ல போ வெளியே... இவ ஒருத்தி கேட்ட தொறந்து போட்டுட்டு வந்திருவா"

"உடன்ன போறதுதானேன்னு வந்திட்டேன்".

கிளம்பி விட்டார்கள் கதவுகளை மூடிக்கொண்டு...

சர்ச்சுக்கு போகும் வழியில், "இந்த சாமி சரியில்ல!!.. போனவாரம் நானும் என் மாப்பிள்ளையும் குடுத்த ரூவா 2௦௦௦ இன்னும் வாசிக்கவேயில்லியே..."

"இந்த வாரம் வாசிப்பாங்க அக்கா..."

"பாப்போம் அப்படியில்லன்னா இன்னைக்கு நான் சாமியாருகிட்ட சொல்லாம விட்டுருவன்னா என்ன?".

ஆலயத்தில் திருப்பலி தொடங்கியிருந்தது... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று அனைவரும் தங்கள் தேவையை உரைத்துக்கொண்டிருந்தார்கள். காகிதத்தில் யாரோ எழுதி கொடுத்ததை, தனக்கு தெரிந்த மெட்டுடன் மெருகேற்றி, பிழைகள் பிரித்து, கவிதையாய், கவித்துவமாய் ஒலிவாங்கியில் ஒப்பித்து, ஒலிப்பெருக்கியில் ஒலமிட்டார்கள் வாலிபப்பருவப் பெண்கள். கூறப்படுவதென்ன , குறையா! இல்லை, நிறையா!! என்பதே தெரியாமல், பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் மக்கள். அனைவரும் ஒரே குரலில் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றும், எங்கள் மன்றாட்டை கேட்டருளும் என்றும் 2ஆம் வாய்பாட்டை ஒப்பிக்கும் பள்ளிக்குழந்தைகளை போல் பதிலுரைத்தனர். செல்வியும் சசிகலாவும் ஆலயத்தில் நுழைய சந்தர்ப்பம் தேடினர். அனைவரும் எழுந்து நின்ற பொது உள்ளே நுழைந்தால் இவர்கள் தாமதமாக வந்ததை அனைவரும் அறிய முடியாது பக்கத்தில் இருக்கும் ஒரு சிலரை தவிர!. ஆலயத்தில் நுழைந்தாகிவிட்டது. பாதிரியார் பிரசங்கம் செய்கிறார். பக்தி பரவசத்தோடு மக்கள் செவிமடுக்கின்றார்கள். பாதிரியாரும் தன் பங்கிற்கு 'கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!' என்று ஆரம்பித்து முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உரையை அரங்கேற்றுகிறார். பிரசங்கம் என்பது ஒருவழி பேச்சு என்பதால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி போலும்!!... பதினைந்து இருபது நிமிடங்கள் பேசியதுடன் அவரது முகத்தில் ஓர் நிறைவு தெரிகிறது!. சமுதாயத்தில் தனது பங்கு அளப்பர்க்கரிது என்ற ஓர் தன்னிறைவுடன் மீண்டும் பலியை தொடர்கிறார்!. காணிக்கை பவனி!!!
அனைவரும் அகன்ற கண்களோடு அமர்ந்திருக்க டிவி தொடர்களுக்கு இடையில் வரும் விளம்பர இடைவேளை போல் விளம்பரங்கள் சில! மா, பலா, வாழை, தேங்காய், புளி, அரிசி, கோழி, ஆடு, முட்டை என்று பலதரப்பட்ட பொருட்கள் - இவையனைத்தும் என்றோ ஒரு நாள் கடவுளை பங்குதாரர் ஆக்கியதற்காய் கொடுக்கப்படும் பங்குகள்!. தன் விளைச்சலில், முயற்சியில் கடவுள் உதவினால் அவருக்கு இவையனைத்தும் லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருவது பல காலமாக ஈடேறி வருகிறது. செல்வி தேங்காய் மற்றும் முட்டை என்று இரண்டு பொருட்களை தன் இரு கரங்களில் ஏந்தி செல்ல 'காணிக்கை தர வந்தோம் இறைவா எம்மையே!' என்று பாடல் ஒலிக்க, தன்னையே தருவதாக பாடல் வரிகள் கூறுவதை மெய்ப்பிக்கும் முயற்சியில் செல்வி, சசிகலா உள்ளானோர் பலர் தன் முகபாவங்களை மாற்றுகின்றனர். இப்போது, நன்றி தெரிவிக்கும் நேரம்!. இதற்காவே காத்திருந்த பலரில் செல்வியும்...

"செல்லத்துரை - செல்வி தம்பதியினர் ரூ 2000 அன்பளிப்பு"

மிகுந்த உற்சாகத்தில் செல்வி. பல பாராமுகங்கள்... பல பொறாமை முகங்கள்... சில பாராட்டும் முகங்கள்...

"திருப்பலி நிறைவேறிற்று"

"இறைவா உமக்கு நன்றி", உரக்கக்குரலில்...

வீட்டுக்கு திரும்புகிறார்கள் அனைவரும் பெருமூச்சுடன்... இன்னும் ஒரு வாரம் கழித்து இங்கு வந்தால் போதுமே!... தனக்கு வாசல்கள் திறக்கப்பட்டுவிட்டதாய் தித்திக்கும் மகிழ்ச்சியுடன் தன் வீட்டு வாசல்களை திறக்கிறாள் செல்வி!!!.